திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதியின் ஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விவரம்:
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதி அவரது வீட்டில் வைத்து கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. மேலும் ஜூன் 1ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜூன் 1ல் ஆஜரான அவருக்கு மீண்டும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி மத்திய குற்றப்பிரிவு தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில் எந்தவித கடுமையான நிபந்தனைகள் வழங்காமல் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாகவும், தொற்றுநோய் பரவலை கரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, கொரோனா பரவல் என பல பிரச்சினைக்க்ள் இருக்கும் போது, ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் அரசு இவ்வளவு ஆர்வம் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கூறி வாதிட்டார். காவல்துறை தரப்பில் கூறப்படும் குற்றசாட்டுகளை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அவரது ஜாமீனை ரத்து செய்வதற்கு எந்த வித சரியான காரணங்கள் இல்லை எனவும், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.