Categories
மாநில செய்திகள்

மதுக்கடைகளுக்கு பதில் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக போலீசாரை ஈடுபடுத்த வழக்கு… பதில்தர அரசுக்கு கெடு..!!

டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைத்து கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்:

கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா பரவலை தடுப்பதற்கு பலகட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தி வந்த நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.

மேலும் மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 5,827 டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்பிற்காக 1827 காவல்நிலையங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில், 10 காவலர்களில் 6 பேர் டாஸ்மாக் பணிகளுக்கும், மீதமுள்ளவர்கள் கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தசமாகி கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரை குறைக்க வேண்டும் எனவும், ஆயுதப்படை போன்ற துறையினரை டாஸ்மாக் கடைகளில் பணிக்கு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |