தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மது கடைகளையும் திறக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கிய காலம் முதலே அத்தியாவசிய கடைகளை தவிர்த்து அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மால், மதுபான கடைகள் ஆகியவை மூடப்பட்டன. இந்த நிலையில், மது கிடைக்காமல் மதுபிரியர்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். பலர், வார்னிஷ், மெத்தனால், ஆல்கஹால் சானிடைசர் போன்றவற்றை குடித்து மரணமடைந்துள்ளனர்.
இதேபோல, கேரளாவில் மது கிடைக்காமல் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இதன் காரணமாக மதுபான விற்பனை செய்யலாம் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மதுவிற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு நாளுக்கு 2 மணி நேரமாவது மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என சூளைமேட்டை சேர்ந்த வசந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மது அருந்துபவர்கள் திடீரென மது குடிப்பதை நிறுத்தினால் இதய துடிப்பு அதிகரித்து, சுவாச பிரச்சனையை ஏற்படுத்துவதோடு மூளையையும் பாதிக்கிறது. பல இடங்களில் மதுபான கடைகள் அடித்து நொறுக்கப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் இது போல 22 சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கள்ள சந்தையில் மது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் செஞ்சியப்பன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் இதுபோல மது கடைகளை திறக்க அனுமதித்து உயர்நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அதனை கேட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.