ராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும், அதனால் பணம் பெற்று பயனடைந்த விவசாயிகள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் வாரந்தோறும் கிராம மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 900 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெறப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். 2018-19 ஆம் ஆண்டுக்கான விவசாய தொகை 165 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு பின் ரூபாய் 100 கோடி விவசாயிகள் வங்கியில் வரவு கணக்கு வைக்கப்பட்டது. விவசாயிகள் பயிர் சேதத்தை கணக்கில் வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு இந்த பணம் இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் ராமநாதபுர விவசாயிகள் 100 ஏக்கர் நிலத்திற்கு வாங்க வேண்டிய பணத்தை 400 ஏக்கர் நிலம் ஆக கணக்கு காட்டி பணத்தை பெற்று ஏமாற்றி வருகின்றனர். இதேபோல் மாவட்டத்தின் பல இடங்களில் இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. ஆகையால் புகார்களின் அடிப்படையில் பதிவிற்கு உதவிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும், அந்த பதிவின் மூலம் பணம் பெற்று பயனடைந்த விவசாயிகள் மீதும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சுமார் 350 பேரின் பதிவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அதனை விரைந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக .தெரிவித்தார்.