விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமாவின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவாகரம் மூலம் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தூக்கிலிட வேண்டும். நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தள்ளி வைக்கக்கூடாது. 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்தப் பொதுத்தேர்வு அறிவிப்பு மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “டெல்டா பகுதியை நாசப்படுத்தும் முயற்சிதான் ஹைட்ரோ கார்பன் திட்டம். முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளின் கஷ்டத்தை நன்கு அறிந்தவர். ஹைட்ரோ கார்பன் எடுக்க அவர் அனுதிக்கமாட்டார் என பாமக நம்புகிறது. 2021இல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும். இதனால் மட்டுமே இட ஒதுக்கீட்டில் உள்ள சட்டச் சிக்கல்களை தீர்க்க முடியும். குறிப்பாக தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கின்றது. அதை நீக்க வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
கிராமசபை என்பது அரசியல் சாசனத்தில் உள்ள ஒரு அமைப்பு. எனவே கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை அரசு மதித்து அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த முறைகேடில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.