தாய் ஒருவர் மகளை 26 வருடங்கள் அடைத்து வைத்து பூனைகளுக்கு கொடுக்கும் உணவை கொடுத்து வந்துள்ளார்.
ரஷ்யாவில் 26 வருடங்களாக தாய் ஒருவர் தனது மகளை பூனைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப் படுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தத் தாயாரின் உடல்நிலை மோசமான நிலையிலேயே மகளுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடேஷ்தா புஷுவேவா என்ற மகள் அவரது 16 வயதிலிருந்து தனது தாயாரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். வெளியுலகம் மிகமிக ஆபத்தானது, மோசமானது எனக்கூறி மகளை குடியிருப்பில் இருந்து வெளியேறுவதற்கு தாய் அனுமதிக்கவில்லை.
தற்போது 42 வயதாகும் நடேஷ்தா தாய் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 26 வருடங்கள் கழித்து குடியிருப்பை விட்டு வெளியில் வந்துள்ளார். தாயின் கட்டளையை ஏற்று கொண்டதாக தெரிவித்த அவர் ஒருபோதும் குடியிருப்பில் இருந்து வெளியில் வருவதற்கு முயற்சிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இவரது வீட்டில் எலிகளும் பூனைகளும் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. தாயும் மகளும் 26 வருடங்களாக ஒரே படுக்கையில் படுத்து உறங்கி யுள்ளனர்.
மகளுக்கு பூனைகளுக்கு கொடுக்கும் உணவையே கொடுத்து வந்துள்ளார் அந்த தாய். அதுமட்டுமன்றி 2006லிருந்துதான் குளித்ததில்லை என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். என் வாழ்க்கை பூனைகளின் வாழ்க்கையை விட மிகவும் மோசமாக அமைந்துவிட்டது அவற்றுக்கு இருக்கும் உரிமைகள் கூட எனக்கு இல்லை. நான் இப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு கூட என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. நான் இப்போது நடைபிணமாக தான் உள்ளேன் என அதிகாரிகளிடம் தனது வேதனையை கொட்டித்தீர்த்த அவர் தனக்கென்று ஒரு அடையாளத்தையும் வேலைவாய்ப்பும் செய்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்.