புதுக்கோட்டை மாவட்டத்திற்கு காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பெரிய கனவாக இருப்பது காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்தான். இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள். இந்த திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. அதில் முதற்கட்டமாக காவிரியில் ஆரம்பித்து தெற்கு வெள்ளாறு பகுதிவரை சுமார் 118.45 கிமீ தூரம், இரண்டாவது கட்டமாக தெற்கு வெள்ளாறு ஆரம்பித்து வைகை வரை சுமார் 150.695 கிமீ தூரம் வரையும், மூன்றாவது கட்டமாக வைகை முதல் குண்டாறு பகுதி வரை சுமார் 34.45 கிமீ வரை செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனால் கரூர் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் மேல் குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலும் சுமார் 18,566 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெரும். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது “காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக ரூபாய் 14௦௦௦ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள பணிக்கு ரூபாய் 700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான பணி தற்போது தொடங்கப்படவுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னத்தூரில் வருகின்ற 21ஆம் தேதி காலை 10 மணியளவில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் இந்த விழாவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.