உத்தரபிரதேச உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள MLA மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாஜக MLA என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நியாயம் கிடைக்க அம்மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த போது சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் கொல்லப்பட்டார். இந்நிலையில் உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்குஉத்தர பிரதேச அரசு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து சிபிஐ வசம் இருக்கும் இந்த வழக்கில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய முயன்றதாக பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் உள்பட 11 பேர் மீது சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்ரை பாதுகாக்க பாஜக முயற்சிக்கின்றது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது முக்கியத்துவம் வைத்ததாக பார்க்கப்படுகின்றது.