அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அலகாபாத் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன.
திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று கண்டன முழக்கம் இட்டனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 28 ஆண்டுகள் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்றும், சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான மாண்பினை குறைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் வழக்கின் தீர்ப்பை கண்டித்தும் உண்மை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு இளைஞர்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தீர்ப்பை கண்டித்தும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு உரிய தண்டனை வழங்கக் கோரியும் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.