ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் எந்தவித தார்மீக நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இதுகுறித்து கூறுகையில்,
சிதம்பரம் அவர்களை கைது செய்ததில் எந்தவித தார்மீக நெறிமுறைகளையும் இந்த அரசாங்கம் பின்பற்றவில்லை. முதல் தகவல் அறிக்கையில் அவருடைய பெயர் இல்லாத பட்சத்தில் அவரை ஏதோ ஒரு தேச விரோத குற்றம் செய்தவரை போல வேட்டையாடி பிடிக்க வேண்டிய அவசியமே கிடையாது என்று தெரிவித்தார். மேலும் அவரை விசாரிக்கக் கூடாது என்று சொல்லவில்லை, கைது செய்யக் கூடாது என்று சொல்லவில்லை ஆனால் அதற்கான நெறிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.