தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும் என நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மகன் உடலில் மோசமான காயங்கள் இருப்பதால் சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் இன்று விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை தொடங்கும் முன் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தகவல் அளித்துள்ளனர்.