தனது மகளுடன் நகைக்கடைக்கு சென்ற பெண் தவறவிட்ட கைப்பையை வாலிபர் ஒருவர் எடுத்துச் சென்ற காட்சி சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ டவுன் பகுதியில் வசிக்கும் கவுசர் என்ற பெண் தனது மகளுடன் நகைக் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆட்டோவிலிருந்து அவர் இறங்கிய போது கையில் வைத்திருந்த கைப்பை அவருக்கு தெரியாமலேயே நழுவிக் கீழே விழுந்து விட்டது. இதை அறியாமல் அவர்கள் கடைக்குள் சென்று நகை வாங்கி பணம் கொடுக்கும் சமயத்தில் கைப்பையை பார்த்த போது அதை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் அந்த கைப்பையில் 2 1/2 பவுன் தங்க நகை இருந்துள்ளது.
இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்ததில் லுங்கி கட்டிய உயரமான வாலிபர் ஒருவர் நகை கடை முன்பாக விழுந்து கிடந்த கைப்பையை எடுத்து அதில் இருந்த நகையை பார்க்கும் காட்சி பதிவாகி இருந்துள்ளது. இது பற்றி கவுசர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவ படத்தை வைத்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.