கனடா நாட்டிலிருந்து மெக்சிகோவிற்குச் சென்ற ஒரு விமானத்தில் அந்நாட்டின் சமூக ஊடக பிரபலங்கள் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவின் 111 Private Club என்ற குழுவில் உள்ள சமூக ஊடக பிரபலங்கள் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று, அந்நாட்டின் மொன்றியலிலிருந்து, மெக்சிகோவில் இருக்கும் Cancun என்னும் பகுதிக்கு ஒரு விமானத்தில் சென்றிருக்கிறார்கள். அப்போது, அவர்கள் முகக் கவசம் அணிய வில்லை.
மேலும், விமானத்தின் விதிமுறைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்ற எதையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. மதுஅருந்தி, கஞ்சா புகைத்து, விமானத்தில் ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி, அரசாங்கம் மற்றும் பொதுமக்களை கொதிப்படைய செய்திருக்கிறது.
அந்நாட்டில், மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் அனுமதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் அதிகமாகி, நாடே ஸ்தம்பித்து வரும் நிலையில், சிறிது கூட சமூக அக்கறை இல்லாமல் அவர்கள் செய்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எனவே, இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அந்நாட்டின் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் Omar Alghabra, உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், அந்த குழுவினர் மெக்சிகோவிலிருந்து, மொன்றியலுக்கு திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததை, அந்த விமான நிறுவனம் ரத்து செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த குழுவினருக்கு 7, 50,000 டாலர்கள் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.