திமுக தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
தமிழகம் எதிர்நோக்கியுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார். கொரோனா பேரிடரால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை மீட்பதற்கான திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஆரம்ப காலங்களில் ”கதாநாயகன்” என்று சொல்லக்கூடிய அளவுக்கு கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்கு. இலவச கலர் டிவி அறிவிப்பு 2006ஆம் ஆண்டில் இருந்தது. 2011இல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
2016 தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்தாக தமிழகத்தில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்படும் என்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதே போல இந்த ஆண்டும் சமூகநலத் திட்டங்கள் இருக்குமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதுள்ள கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு அனைத்து மாணவர்களுக்கும் செல்போன் கொடுக்கலாமா ? என்ற ஒரு கருத்து கேட்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் அறிக்கை ரெடி ஆகி, பிப்ரவரி மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.