சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிபூண்டி நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி-கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்பு பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம் போல் மெதுவாக சென்றது. அப்போது அந்த பகுதியில் கூட்டாளிகளுடன் தயாராக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ரயில் படிக்கட்டில் தாவி அதில் பயணம் செய்யும் பயணிகளின் செல்போனை பறிக்க முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்த அந்த இளைஞரின் இடது கால் மீது சக்கரம் ஏறி துண்டானது. மேலும் வலது கால் முற்றிலும் நசிங்கி சதை கிழிந்த நிலையில் சேதம் அடைந்துள்ளது.
உடனே அந்த இளைஞரை அவரது நண்பர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர் ராம் நாயக்கொருக்கு பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கால் துண்டான இளைஞர் பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி பகுதியை சேர்ந்த நவீன்(24) என்பதும் இவர் ஓடு ரயிலில் பயணிகளை செல்போன் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து இவர் மீது கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளது.