பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி செல்போன் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் வானகரம் பகுதியில் மழையால் சேதமடைந்த இன்டர்நெட் கேபிளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து எதிர்பாராதவிதமாக இன்டர்நெட் வயரில் இணைப்பு கொடுக்கும் போது மின்சார வயரில் ராஜேஷ்குமாரின் கை உரசியதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ராஜேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.