செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப செட்டியார் நகர் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. இவ்வாறு செல்போன் கோபுரம் அமைத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை அமைக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் நாகராஜ் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் வீரப்ப செட்டியார் நகரில் செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதால் பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி அமைந்திருப்பதால் இது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். எனவே இந்த செல்போன் கோபுரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.