பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்காததால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள ,காட்டுப்பாக்கம் அம்மன் நகர் மெயின் ரோடு பகுதியில், அஜித் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 13 வயதுடைய மகன் ராகுல்ராஜ் ,அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மகன் ராகுல்ராஜ் தனியாக இருந்துள்ளார். வேலை முடிந்ததும் கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகன் ராகுல் ராஜ் சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த போலீசார் , தற்கொலை செய்துகொண்ட ராகுல்ராஜ் உடலை எடுத்துக்கொண்டு, உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக பெற்றோரிடம் விசாரணை செய்தபோது, தங்களுடைய மகன் ராகுல்ராஜ் செல்போன் வாங்கித் தருமாறு அடம் பிடித்ததாகவும் ,அதற்கு பெற்றோர் கண்டித்து மறுப்பு தெரிவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. எனவே செல்போன் வாங்கித் தர மறுத்ததற்காக ராகுல் ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.