நண்பரிடம் செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் தெய்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற மகன் உள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பரான தங்கபாண்டியன் என்பவரை சந்திக்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராகவன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாங்கிய தங்கபாண்டியனின் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காணவில்லை.
இதுகுறித்து தங்கபாண்டியன் ராகவனிடம் கேட்டுள்ளார். அதற்கு ராகவன் எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். இது குறித்து தங்கபாண்டியன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் செல்போன் அலைவரிசையை சோதனை செய்த போது ராகவனிடமிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் ராகவனிடம் நடத்திய விசாரணையில் செல்போனை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து ராகவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.