செல்போன் வாங்கி தராததால் விரக்தியடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூட்டேற்றி தொழிக்கோடு பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஆரதி, வீனா என்ற மகள்கள் உள்ளனர். தற்போது ஆரதி லேப் டெக்னீசியன் படித்துள்ளார். அவரது தங்கை வீனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆரதிக்கு அய்யப்பன் செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால் வீனா அவரது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு வீனாவின் பெற்றோர் பிளஸ்-2 முடித்ததும் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் வீனா தனக்கு இப்போது செல்போன் வேண்டுமென பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செல்போன் வாங்கி தராததால் வீனா கடந்த 2-ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர் வீணாவை உடனடியாக மீட்டு கருங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து வீனாவை மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் மாணவி வீனா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த குழித்துறை காவல்துறையினர் வீனாவின் உடலை உடனடியாக மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.