சிமெண்ட் மூட்டைகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் முகமது ஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிமெண்ட் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கொண்டாநகரம் பகுதியில் வசிக்கும் ராஜா மைதீன், சஞ்சய், அஜித் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் ராஜா மைதீன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரின் நடத்தை சரியில்லாத காரணத்தால் முகமது ஷாலி அவர்கள் இருவரையும் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இந்நிலையில் முகமது ஷாலி இரவு நேரத்தில் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் முகமது ஷாலி கடையை திறக்க வந்தபோது அங்கிருந்த 20 சிமெண்ட் மூட்டைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து முகமது ஷாலி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் ராஜா மைதீன், அஜித் மற்றும் சஞ்சய் ஆகியோர் சிமெண்ட் மூட்டைகளை திருடியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அஜீத் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த சிமெண்ட் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜா மைதீனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.