Categories
மாநில செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – வேறு வழியின்றி தயாராகும் மக்கள்..!!

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எதிர்ப்புகள் வலுத்தாலும், மத்திய அரசு இதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதால், வேறு வழியின்றி அதற்கான ஆவணங்களைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

முதன் முதலாக தேசிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 1872ஆம் ஆண்டும், பின்னர் ஒரே நேரத்தில் நாடு முழுமையாக ஒருங்கிணைந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்கும் நிலையில், இந்திய நாடு விடுதலையடைந்த பின், எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேசிய அளவில் பணிகள் நடைபெறவுள்ளன.

கடந்த 2010-11 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் போல் அல்லாமல், அதிகப்படியான கேள்விகளை மத்திய அரசு இம்முறை விண்ணப்பத்தில் சேர்த்துள்ளது என்பதால், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அரசியல் கட்சிகள், பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்தபடி இருக்கின்றன. ஆயினும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மக்கள் தயாராகி வருவதாகவே தெரிகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 100 வார்டுகளிலும் உள்ள மக்கள், அந்தந்த மண்டல மற்றும் பகுதி அலுவலகங்களில் தங்களது பிறப்புச் சான்று உள்ளிட்ட ஆவணங்களைப் பெற தொடர்ந்து விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி அலுவலகம் உள்பட 10 மண்டல அலுவலகங்களிலும் பிறப்புச் சான்று உள்ளிட்ட ஆவணங்களைப் பெற மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் மத்திய அரசு பின்வாங்குவது போலத் தெரியவில்லை என்று கூறும் மக்கள், எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டிய நிலை உள்ளதால், தேவையான ஆவணங்களைப் பெற விண்ணப்பிப்பதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, ஏப்ரல் மாதத்திற்குள் ஆவணங்களைப் பெற வேண்டும் என்கிற முனைப்பு மக்களிடம் இருப்பதால், அதற்கு ஏற்றவாறு அதிக அளவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் கோரும் ஆவணங்களை கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Categories

Tech |