இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கூட்டம் கூட்டமாக நகர்ந்து வருகிறார்கள். புலம்பெயரும் தொழிலாளர்களின் வெளியேற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை வீடியோ வழியாக விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சொந்த ஊர் மற்றும் வீடுகளை நோக்கி புலம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே நோய் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி புலம்பெயர்பவர்களை அச்சுறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பீதி என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருவதைக் கவனித்து, அந்த நிலைமை குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.