மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்திற்கு ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் கூறியதாவது, உரம் மற்றும் எரிபொருள் விலை போன்ற வெளி உலக காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் மொத்த விலை பணவீக்கம் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேல் இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது. அதன் பிறகு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை போன்ற பல்வேறு காரணங்களால் தனியார் மூலதன செலவு அதிகரித்ததோடு, வங்கிகளின் வாராக்கடன் கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவுக்கு தற்போது 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. வரி வசூலில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் துணை மானிய கோரிக்கையில் கேட்கப்பட்ட நிதியை திரட்ட முடியும். மேலும் கொரோனா பரவலை மத்திய அரசு கையாண்ட விதத்தினால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.