பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு கேட்டிருந்த நிலையில் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வைப்பதே எங்கள் இலக்கு என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது
ஒரு மாதமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகின்றது. நாட்கள் பல கடந்தாலும் போராட்டத்தின் வீரியம் இதுவரை குறையவில்லை. அதற்கு மாறாக தினம் தினம் போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. டெல்லியில் நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்து சாலையில் அமர்ந்து அவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் கேட்கையில் “கடுமையான குளிர் நிலவினாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என கூறியுள்ளார்.
டெல்லியையும் உத்தரப்பிரதேசத்தையும் இணைக்கக்கூடிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு குளிரினால் அதனுள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு சார்பாக ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் விவசாயிகள் சங்கம் இதற்காக தனி குழு ஒன்றை அமைத்துள்ளது. அவர்களே முடிவெடுப்பார்கள் என்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த குழுவினரும் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர பரிந்துரைக்க மாட்டார்கள் முழுமையாக சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு வலியுறுத்துவார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் மத்திய அரசு தரப்பில் சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை. திருத்தங்களை மேற்கொள்கிறோம் என்றும் எழுத்துப்பூர்வமாக உறுதிப்பாடு எழுதிக் கொடுக்கவும் தயார் என்றும் கூறி போராட்டத்தை விட்டு இறங்கி வர வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்படி மேற்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதோடு போராடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது இத்தகைய சூழலில் வரும் வாரத்தில் ஒருநாள் நிச்சயமாக பேச்சுவார்த்தை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.