கொரோனா வைரஸ் நமக்கு கிடைத்த மறைமுக ஆசிர்வாதம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வர, பொதுமக்கள் அச்சத்தில் ஒருபுரமிருக்க, மற்றொருபுரம் இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கினாலும் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இதிலிருந்து மீண்டு எழுவதற்கான நேர்மறையான எண்ணங்களை அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் தொடர்ந்து நமக்கு அளித்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
கொரோனா வைரஸ் நமக்கு மறைமுகமாக கிடைத்த ஆசீர்வாதம். கொரோனா வந்ததன் காரணமாக கைகழுவுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட நல்ல பழக்கங்களை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த தருணங்களில் குடும்பங்களுடன் நேரத்தை நாம் மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.