கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 56ஆக அதிகரித்தது. இன்று மட்டும் கேரளாவில் 8, டெல்லியில் மற்றும் ராஜஸ்தானில் தலா 1 என 10 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் இன்று மரணம் அடைந்தார். ஆனால் அவருக்கு ரத்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi: A meeting of a group of Union Ministers underway at Ministry of Health & Family Welfare. #CoronaVirus pic.twitter.com/KgbGIcqepA
— ANI (@ANI) March 11, 2020
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருவதை அடுத்து டெல்லியில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் கொரோனா வைரஸ் குறித்த அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.