ஆசிரியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்திரமனை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தி சத்திரமனை அருகே ஸ்கூட்டியில் சென்ற போது 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
அதன்பிறகு சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த மர்ம நபர்கள் ஆனந்தி அணிந்திருந்த 1 1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஸ்கூட்டியிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆனந்தி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.