இரவு பணிக்காக சென்ற செவிலியரிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பகுதியில் சத்யப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் வைகை ஆற்றின் புது பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது 2 மர்ம நபர்கள் சத்யபிரியாவை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த மர்மநபர்கள் சற்றும் எதிர்பாராத நிலையில் சத்யப்ரியா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சத்திய பிரியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.