வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் இருக்கும் கேம்பிரிட்ஜ், கார்டிஃப், மற்றும் எம்.ஐ.டி. ஆகிய பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வீனஸ் கிரகத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். பூமியிலிருந்து சுமார் 47.34 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வீனஸ் இருக்கிறது.
இக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது என்று கருதப்பட்டது. அதாவது, அங்கு இருக்கும் மேகங்களில் கந்தக அமிலம் நிறைய உள்ளது. எனவே அங்கு உயிர்கள் வாழ முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், வீனஸ் கிரகத்தில் இருக்கும் மேகங்களில் அமோனியா இருக்க வாய்ப்புகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள், கந்தக அமிலம் அதிகம் இருக்கும் மேகங்களில், அமோனியா இருக்க வேதியல் சான்றுகள் இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். இதுதொடர்பில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் வில்லியம் பெய்ன்ஸ் தெரிவித்துள்ளதாவது, வீனஸ் கிரகத்தில் அமோனியா இருக்கிறது என்பது நிஜம் என்றால், அங்கு கட்டாயம் நுண்ணுயிர்கள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் எரிமலை வெடிப்புகள், மின்னல் ஆகிய இயற்கை நிகழ்வுகளை காட்டிலும் உயிரியல் வகையிலான வழிமுறைகள் தான் அக்கிரகத்தில் அமோனியா உருவாக காரணமாக உள்ளது என்று கருதுகிறார்கள். மேலும் அங்கு ஹைட்ரஜன் வாயு இருக்கிறது, என்பதால் பூமியை போன்று அக்கிரகத்தில் நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.