ஜூலை 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருப்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதியன்று இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்களுக்கு முன்பு கவுன்டவுன் நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில் நுட்ப குழு மேற்கொண்ட ஆய்வில் ஏவுகணையின் கிரையோஜெனிக் இன்ஜின் வாய் குழலில் கசிவு ஏற்ப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த கோளாறை ராக்கெட்டை பிரிக்காமலே சரி செய்ய முடியும் என்றும் சரி செய்யப்பட்ட பின் சந்திராயன்-2 விண்ணில் ஏவ படுவதற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தரப்பு வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 22ம் தேதி சந்திராயன்-2 விண்கலமானது ஜிஎஸ்எல்வி மார்க்-3 ஏவுகணையின் மூலம் சரியாக பிற்பகல் 2.45 மணியளவில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.