அமெரிக்காவின் பிரச்சனைகளை தீர்க்கவும், மனித நேயத்துடன் சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும் அதிபர் ஜோ பைடன் 3 உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் குடியேற்றம் தொடர்பான பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவைகள் அனைத்தும் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பல கடுமையான விதிகளை ரத்து செய்யும் வகையில் உள்ளது.
*நிபுணர் குழுவிடம் இருந்து ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த 180 நாட்களுக்குள் குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் இந்தியர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பலன் கிடைக்கும்.
*உள்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லைகளை தாண்டி வரும் அகதிகளை மனிதநேய அடிப்படையில் பராமரிக்கும் திட்டம் உருவாக்கப்படும்.
*முறையான மற்றும் வெளிப்படையான குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவதற்கு தற்போது உள்ள சட்டங்கள் ,விதிமுறைகள், பிரச்சினைகள் குறித்து ஆராயப்படும் என்ற மூன்று உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் கூறியதாவது, நான் இங்கு புதிய சட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. இதற்கு முன் மோசமக இருந்த கொள்கைகளை நீக்கி வெளிப்படையான, மனிதநேயத்துடன் கூடிய குடியேற்ற நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவை வலுவானதாகவும், பாதுகாப்பானதாக மாற்ற முயற்சிக்கிறேன் என்று கூறினார்.