தனியார் நிறுவனம்,என கூறி பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டரில் இருந்த 15 இளம்பெண்களை போலீசார் எச்சரித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற பகுதியில் உள்ள இளம்பெண்கள், தாங்கள் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அங்கு நூறு நபர்களில் செல்போன் எண்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்போன் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் தருவதாகவும் கூறி வந்துள்ளனர். அதோடு குலுக்கல்முறையில் விழுந்த இப்பரிசுகளை குறைந்த பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், செல்போன் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
இவர்களின் வார்த்தைகளை நம்பிய பொதுமக்கள் பணம் செலுத்தி பொருட்களை வாங்கிய போது, அது தரம் குறைந்ததாகவும், சில சமயம் அதில் களிமண் பார்சலும் இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் உத்தரவின்படி, குடியாத்தம் போலீசார் புதுப்பேட்டை கோட்டா சுப்பையா தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது அவ்வீட்டில் இருந்த 15 இளம் பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளது.
இவர்கள் பொது மக்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு குறைந்த விலையில் பவர்பேங்க் மற்றும் செல்போன்களை தருவதாகக் கூறிஅவர்களை ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை வரவழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு நடத்திய சோதனையில் ஏராளமான செல்போன்கள், களிமண் பார்சல்கள் மற்றும் பல தொலைபேசி எண்களை உள்ளடக்கிய புத்தகங்கள் இருந்ததை கண்ட போலீசார் அதனை கைப்பற்றியதோடு, அந்த போலி கால் சென்டரை நடத்திய நபரின் விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.