முகக் கவசங்களை குறைந்த விலைக்கு வெளிநாடுகளில் இருந்து வாங்கி தருவதாக கூறி ஒரு நிறுவனம் 46 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் பகுதியில் நரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில் முகக்கவசத்திற்கு பெரிய அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் டென்மார்க் மற்றும் ஜெர்மனி போன்ற வெளி நாடுகளிலிருந்து முககவசம் விலை குறைந்த விலைக்கு வாங்கி தரப்படும் என்று ஒரு நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளது. அதனை நம்பிய நரேஷ் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்தி புக்கிங் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நரேஷ் 46 லட்சம் ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் வெளிநாடுகளில் இருந்து முக கவசங்களை வாங்கித் தராமல் அந்த நிறுவனம் 46 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது நரேஷிர்க்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகி விட்டதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நரேஷ் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகிய அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.