கடல் உணவில் மோசடி செய்த 2 பேருக்கு 1,446 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் லாம்கேட் என்ற கடல் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் ஏராளமான கடல் உணவுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. மக்கள் அனைவரும் தேடிச் சென்று சாப்பிடும் அளவுக்கு அந்த உணவகம் பெயர் பெற்றிருந்தது. உணவகத்தின் வியாபாரம் மேலும் வளர்ச்சி அடைய உணவக உரிமையாளர் புதுவிதமான உத்தியை கையிலெடுத்தார். சலுகைத்திட்டத்தின் கீழ் 10 பேர் உணவகத்தில் வந்து கடல் உணவு சாப்பிடுவதற்கு 28 டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ரூ.2,100
இந்திய மதிப்பில் சுமார் 2,100 ரூபாய்யை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் தொகையை செலுத்தி வவுச்சர் பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அவர்களுக்கு வரிசைப்படி உணவு வழங்கப்படும் என்று உணவு நிர்வாகம் அறிவித்தது.வழக்கமான விலையை விட இது மிகவும் குறைந்த விலை என்பதால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செலுத்தி வவுச்சர்களை பெற்றனர்.
12 கோடியை அள்ளிய வவுச்சர்:
பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து வவுச்சர் பெற்றதால் கிட்டத்தட்ட உணவகத்துக்கு 1.6 மில்லியன் டாலர் வசூல் ஆகியது. இந்திய ரூபாயின் படி 12 கோடி வவுச்சர் மூலமாக உணவகத்துக்கு கிடைத்தது. தொடக்கத்தில் பணம் செலுத்தி வவுச்சர் பெற்றவர்களில் சிலருக்கு மட்டுமே சலுகை திட்டத்தின் கீழ் கடல் உணவை கொடுக்க முடிந்தது. பதிவு செய்த அனைவருக்கும் கடல் உணவை சலுகை விலையில் கொடுப்பதற்கு பல மாதங்கள் ஆகும் என தெரியவந்தது.
ஹோட்டல் மீது புகார்:
அதுமட்டுமல்லாமல் அனைவருக்கும் சலுகை விலையில் உணவு கொடுக்கும் அளவிற்கு கடலில் உணவு கிடைப்பதில்லை என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில், பணம் செலுத்தி வவுச்சர் பெற்றவர்களின் பணம் திரும்ப வழங்கப்படும் என கடையின் உரிமையாளர் தெரிவித்து விட்டு கடல் உணவக கடையை இழுத்து மூடினார். இதனால் வாடிக்கையாளர் பலரும் ஏமாற்றம் அடைந்தனர், இதன் பலரும் ஓட்டல் நிர்வாகம் மீது புகார் செய்தது. இதையடுத்து அங்குள்ள காவல் துறையினர் உணவக உரிமையாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து பாங்காங் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தியது.
1,446 ஆண்டு சிறை தண்டனை:
நீதிமன்றத்தில் இருவரும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் இருவருக்கும் தலா 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அதை பாதியாக குறைத்து 772 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது தாய்லாந்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு தாய்லாந்து ஒரு மோசடி வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு 13,000 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.