திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இறுதியாக பேசிய அவர், நான் இறுதியாக அரசுக்கு சொல்ல விரும்புவது இந்த கொரோனா காலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும், குளறுபடிகளும் குழப்பங்களும், உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மருத்துவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி அதிகப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சி முகட்டை எட்டும் என்ற எச்சரிக்கையை தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களை அக்கறையுடன் கவனிக்கவேண்டும். முன்கள வீரர்களுக்கு தக்க ஊக்குவிப்போம், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். கொரோனாவில் உயிரிழந்த ஏழை எளிய குடும்பங்களுக்கு தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும். இந்த பேரிடர் காலத்தில் அமைச்சர்களுக்கிடையே நடக்கக்கூடிய குழு மனப்பான்மை அடிப்படையிலான தன்முனைப்பு சண்டை முடிவுக்கு வர வேண்டும். அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பதவிப் போட்டி தவிர்க்கப்படவேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எந்தவித ஒளிவு மறைவுமின்றி, கூட்டல் – கழித்தலில் இல்லாமல், அப்படியே அடுத்த இரண்டு நாட்களுக்குள் மக்கள் மன்றத்தின் முன் தமிழக அரசு வைத்தாக வேண்டும். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்று சொன்னால் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடும் என எச்சரிக்கை செய்து என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்து கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.