தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தையுடன் ஒரு பெண் சண்டையிட்டு உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பட்கவா தேயிலை தோட்டத்திற்கு ஒரு பெண் பணிக்குச் சென்று இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஆயுதமின்றி, வெற்று கரங்களுடன் அந்த சிறுத்தையுடன் சண்டை போட முயன்றார். இதனையடுத்து சுமார் பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அந்த சிறுத்தை அவரை தாக்குவதை நிறுத்திவிட்டு காட்டிற்குள் ஓடிவிட்டது. மேலும் சிறுத்தை தாக்கியதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார்.
அதன்பின் அந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக சென்று அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போதுதான் வெற்றுகரங்களுடன் சிறுத்தையுடன் தனியாளாக போராடிய அந்த பெண்மணி லீலா ஓரான் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்தப்பெண் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும், அவரின் பலம் அனைவரும் வியக்கத்தக்க வகையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.