சென்னை மாநகராட்சிக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி பாராட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், சென்னை மாநகராட்சி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதோடு மக்கும் குப்பைகளை சேகரித்து அதனை இயற்கை உரமாக மாற்றும் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல தரப்பினர் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை மாநகராட்சியின் செயலுக்கு ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் குப்பைகளிலிருந்து, இயற்கை உரத் தயாரிப்பு அதிகரித்துள்ளதை பாராட்டுகிறேன். சென்னை மாநகராட்சி இந்த இயற்கை உரங்களை கிலோ ரூபாய் 20 க்கு விற்பனை செய்கிறது. காலியிடம், வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டங்கள் அமைக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வரும் சூழலில், முன்பதிவு செய்பவர்களுக்கு வீடு தேடி சென்று இயற்க்கை உரம் வழங்கும் செயல் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.