சென்னையில் இன்று ஒரு காவல் உதவி ஆணையர் உட்பட 81 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகிறது.
* சென்னை ஆயிரம் விளக்கு மேன்சைட் காவலர் குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவலர் குடியிருப்பில் வசிக்கும் சேத்துப்பட்டு காவல் நிலைய போக்குவரத்து தலைமை காவலருக்கு பாதிப்பு உறுதியானது. அதேபோல, மாம்பழம் காவலர் குடியிருப்பில், பெண் தலைமை காவலர் ஒருவரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
* சென்னை புளியந்தோப்பில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா அதிகம் பாதித்த திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் 196 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, காவல் உதவி ஆணையருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* சென்னை வடபழனி காவேரி தெரு, துரைசாமி நகரில் தலா 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* கோயம்பேடு சந்தை தொழிலாளர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் சமூகநலக்கூடத்தில் தங்கியிருந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* சின்மயா நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.