கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது.
கொரோனா நோய் தொற்றை தடுக்க மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, பல்வேறு உத்தரவுகளை மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக எச்சில் துப்பினால் அபராதம், மாஸ்க் அணிய வில்லை என்றால் அபராதம் என்றெல்லாம் உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை அதிகம் பாதித்த பகுதியாக விளங்கும் சென்னையில் இப்படியான கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.இந்நிலையில்தான் சென்னையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காலை ஏழு முப்பது மணி முதல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக, இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. காய்கறிகள், பூக்கள் வாங்க வருபவர்கள் காலை 4 மணி முதல் 7 மணிக்குள் வரவேண்டும் தடையை மீறி மார்க்கெட் வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் வந்தால் நாளை முதல் பறிமுதல் செய்யப்படும். மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கொண்டுவந்து காய்கறிகளை வாங்க நேர கட்டுப்பாடு இல்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.