சென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்படும் என அறிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்துக்குள் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது.
ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் – பழைய இ-பாஸ் செல்லாது என கூறிய அவர், போலி இ-பாஸ் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்படும். சென்னையை சுற்றி 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையின்றி வெளியில் வருவோரை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும்.
முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும், அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த முறை அனுமதி இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பணியாளர்கள் சென்னையில் இருந்து புறநகருக்கு செல்ல அனுமதி இல்லை என்றும்
வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். மாவட்ட எல்லைகள் மற்றும் மாவட்ட பகுதிக்குள் கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும், ஆட்கள் பற்றாக்குறை இல்லை. 10 சதவீதம் காவலர்களை காத்திருப்பில் வைத்துள்ளோம், 18000 காவலர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.