Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR பலப்பரீட்சை…… ஆண்ட்ரே ரஸெலின் அதிரடியை கட்டுப்படுத்துவாரா தோனி..?

ஐ.பி.எல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.  இந்த இரண்டு அணிகளுமே கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடி  வெற்றிப் பெற்ற்றுள்ளது. சி.எஸ்.கே முன்னதாக நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது.  சிஎஸ்கேவின் அபார சுழற்பந்து வீச்சினால், பஞ்சாப் அணி மண்ணை கவ்வியது. அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸெல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். பரபரப்பான சூழலிலும் சாத்தியமே இல்லாத வெற்றிகளை தனது ருத்ர தாண்டவத்தால் சாத்தியமாக்குகிறார்.

இரண்டு அணிகளுமே சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளன. இருந்தாலும் ஆண்ட்ரே ரஸெலின்  ஆட்டமே அனைவரது கவனமும் இருக்கிறது. கடைசியாக பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பிக்கு எதிரான ஆட்டத்தில் பரபரப்பான நேரத்தில் சர்வ சாதாரணமாக   13 பந்துகளில் 48 ரன்களை விளாசி ரஸெல்  கொல்கத்தாவுக்கு பெரும் வெற்றியை தேடித் தந்தார். இரு அணிகளுமே தலா 4 போட்டிகள் விளையாடி 3 வெற்றியும், 1 தோல்வியுடனும்   மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றனர்.

இன்றைய  ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு செல்லும். சென்னை அணியை பொறுத்தவரை ஹர்பஜன் சிங் , ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரும், கொல்கத்தா அணியில்  சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் எதிரணியை மிரட்டி வருகின்றனர். அதேபோல வேகப்பந்து வீச்சுக்கு சி.எஸ்.கேவில் தீபக் சாஹர், தாக்குர் ஆகியோர் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

பேட்டிங்கை பொறுத்தவரைசென்னை அணியின்  தொடக்கம் கொஞ்சம் சுமாராகவே இருக்கிறது. சேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இதுவரை பெரியளவில் சோபிக்கவில்லை. கடந்தப் போட்டியில் தொடக்க வீரர்  டூ பிளசிஸ் மற்றும் கேப்டன் தோனியும் சேர்ந்துதான் அணியை காப்பாற்றினர். கொல்கத்தாவில் பேட்டிங்கில்  கிறிஸ் லின், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, நிதிஸ் ராணா, ஆண்ட்ரே ரஸெல்  ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். இன்றைய போட்டியில் கேப்டன் தோனி எப்படி ஆண்ட்ரே ரஸெல்  அதிரடியை கட்டுப்படுத்தப்போகிறார்  என்பது சென்னை ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Categories

Tech |