Categories
கால் பந்து விளையாட்டு

சரமாரியாகக் கோலடித்து அசத்திய சென்னை: கேரளா அணியை வீழ்த்தி அபாரம்!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்று முன்தினம் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணி 6-3 என்ற கோல்கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணிக்கு ரஃபேல் கிரிவெல்லாரோ (rafael crivellaro) ஆட்டத்தின் 39’ஆவது, 45+1’ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து நெரிஜியஸ் வேல்ஸ்கீஸ் (nerijius valskis) தனது பங்கிற்கு ஆட்டத்தின் 45’ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னையின் எஃப்.சி. அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

சென்னையின் எஃப்சி அணி

இதனையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பெர்த்தலோமிவ் ஓபேச் (Bertholomew ogbeche) 48’, 65’, 76’ஆவது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்களை அடித்து கேரள அணிக்கு நம்பிக்கையளித்தார்.

கேரளா அணியின் பெர்த்தலோமிவ் ஓபேச்

ஆனால் அதனைக் குலைக்கும்விதத்தில் சென்னை அணியின் லல்லியான்சுலா சண்டே (lallianzuala chhangte) 59’, 80’ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இருகோல்களை அடித்து சென்னை அணியின் வெற்றியை உறுதிப்படுதினார். ஆட்டமுடிவுக்கு பின் கொடுக்கப்பட்ட கூடுதல் நிமிடமான 90+2’ஆவது நிமிடத்தில் சென்னையின் நெரிஜியஸ் வேல்ஸ்கீஸ் மீண்டுமொரு கோலடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ்

இதன்மூலம் சென்னையின் எஃப்.சி. அணி 6-3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின்மூலம் தொடர்ச்சியாக தனது நான்காவது வெற்றியைப் பெற்ற சென்னையின் எஃப்.சி. அணி புள்ளிப்பட்டியலில் 21 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Categories

Tech |