தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தொடர்பான நிலையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் முதல் 2 நாட்களாக மழை பெய்யாத நிலையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே தேனாம் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், பாரிஸ் கார்னர், வேளச்சேரி, ஆழ்வார்பேட்டை, அண்ணா சாலை, அடையாறு, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை பெய்த சில மணி நேரங்களிலேயே அப்படியே நின்று விட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் சில தனியார் வானிலை ஆய்வாளர்கள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பிற்பகல் நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இதனால் மழையை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் எப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற டாப்பிக் தான் இணையதளத்தில் பரவலாக இருக்கிறது.