சென்னையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பொழிந்து வரும் கனமழையினால் பல பகுதிகளில் சாலைகள் நீரில் தேங்கியுள்ளது. அதிலும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது.
இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பொது பணித்துறையின் கீழ் உள்ள கொசஸ்தலை வட்டத்தில் மொத்தம் 336 ஏரிகள் உள்ளன. இதில் 58 ஏரிகள் 100%மும், 37 ஏரிகள் 76%மும், 50 ஏரிகள் 51%மும், 107 ஏரிகள் 50%மும், 79 ஏரிகள் 25%மும் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் தற்பொழுது 33. 98 அடி அதிகரித்துள்ளது.
மேலும் அந்த நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடி நீரில் தற்பொழுது 2,786 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இதில் நீர்வரத்து நொடிக்கு 2, 244 கன அடியாக உள்ளதால் 4,883 கன அடி நீர் எரியிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து சோழவரம் ஏரியில் அதன் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 18 அடி நிரம்பியுள்ளது. மேலும் அதன் முழு கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடி நீரில் தற்பொழுது 908 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
அதிலும் நீர்வரத்து நொடிக்கு 520 கன அடியாக இருப்பதால் 1,200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் புழல் ஏரி அதன் மொத்த உயரமான 21 .20 அடியில் தற்பொழுது 19.50 அடியை எட்டியுள்ளது. மேலும் அதன் முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடி நீரில் தற்போது 2,916 கன அடி நீர் இருக்கிறது. அதிலும் நீர்வரத்து நொடிக்கு 1,357 கன அடியாக உள்ளதால் 2,000 கன அடி நீர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. அவற்றில் 138 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 88 ஏரிகள் 70%மும், 48 ஏரிகள் 50%மும் நிரம்பியுள்ளன என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கின்ற மதுராந்தகம் ஏரியின் முழு உயரமான 23.3 அடி நிரம்பியதால் அதிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மேலும் அதன் முழு கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்பொழுது 2,942 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அதிலும் நீர்வரத்து நொடிக்கு 710 கன அடியாக உள்ளதால் 2 ,144 கன அடி நீர் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏரியைச் சுற்றியுள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.