Categories
மாவட்ட செய்திகள்

நிவாரண முகாம்கள் அமைப்பு…. உணவு வழங்க நடவடிக்கை…. மாநகராட்சி ஆணையர் உத்தரவு….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுரங்கப்பாதைகளில் நீர் புகுந்து போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரானது தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து மழைநீரால் சூழ்ந்துள்ள பகுதியில் இருப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்கள் என 169 நிவாரண முகாம்களை சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மழைநீர் புகுந்துள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்களை மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், மற்றும் மீட்பு குழுவினர் போன்றோர் மீட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 169 நிவாரண முகாம்களில் 889 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்பொழுது கொரோனா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் அதிகமாக பரவுவதால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் அனைத்து முகாம்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முகாம்களில் உள்ளவர்களிடம் சளி, காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்கின்றனர். ஒருவேளை அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மூன்று வேளை உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் சுமார் 1,29,000 மக்களுக்கு காலையில் பொங்கல், ரவா கிச்சடி போன்ற உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 3, 36,000 மக்களுக்கு சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், பிரிஞ்சி சாதம் போன்றவற்றை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கியுள்ளனர். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளது. அதில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான உணவு வழங்க பொறுப்பு அதிகாரிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நியமித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டதில் ‘சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவை வழங்க வருவாய்த் துறையின் சார்பில் வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் என சுமார் 200 பேரை தொடர்ந்து கண்காணிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு வேளைக்கும் சுமார் 1,50,000 பேருக்கு உணவு சமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |