சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை நகரம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திம்மாவரம், ஆத்தூர், புலிப்பாக்கம், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜ்பவன் நெல்லிதோப்பு முதலியார்பேட்டை மற்றும் கிராம பகுதிகளான திருக்கனூர், மடுகரை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது.