திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி நடைபெற்றது. ஓட்டு மொத்த தமிழகமும் சுஜித் எப்படியாவது உயிருடன் வர வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
இன்று அதிகாலை சுஜித் உயிரிழந்து விட்டான் என்ற சோகமான செய்தியே வந்தது. பின்னர் சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் பாத்திமா புதூர் கல்லறைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. சுஜித் உடலுக்கு முக ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் பலரும் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், முதலமைச்ச எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் குழந்தை சுஜித்தின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின் சுஜித்தின் பெற்றோரைச் சந்தித்த முதலமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.