இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் என்னும் அரக்கனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தீபாவளி திருநாள், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் இருள் நீங்கி, ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குகிறது.
தீபாவளி பண்டிகையன்று, மக்கள் அதிகாலை எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தாடைகளை அணிந்து, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, இறைவனை வணங்கி உற்றார், உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து உண்டு, உற்சாகத்துடனும் குதூகலத்துடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.தித்திக்கும் தீபாவளித் திருநாளில், அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.