இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் நாங்குநேரி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அதிமுக இடைத்தேர்தலுக்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரிடம் ஆதரவு கேட்டனர். ஆனால் இதுவரையில் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கான ஆளுநராக பதவி ஏற்றார். இவருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிலும் அதிமுகவில் இருந்து எந்தவொரு அமைச்சரும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் திடீர் திருப்பமாக இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளனர்.சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடியிடம் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர்கள் பரப்புரை செய்ய பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையின் மூலம் தங்கள் மீது எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அதிமுக.